தேர்தல் கூட்டணி குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


தேர்தல் கூட்டணி குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 6 Sept 2020 4:45 AM IST (Updated: 6 Sept 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் கூட்டணி குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஓ.டி.டி.யில் திரைப்படங்கள் வெளியிடுவது என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது. தற்போது திரைப்படங்கள், வெப் சீரியல் உள்ளிட்டவை ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகிறது. அதற்கு கேளிக்கை வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் தீர்க்கமாக முடிவு செய்தால் அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும். ஓ.டி.டி.யில் பிற்காலத்தில் நாடக தொடர்களும் கூட வெளியாகலாம். எனவே கேளிக்கை வரி விதிப்பு பற்றி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்யும்.

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். என்றென்றைக்கும் போற்றப்படுகின்ற தலைவர். இன்றைக்கும் மக்கள் மனதில் அழிக்க முடியாத தலைவராக இருக்கிறார். மக்கள் மனதில் அழியாத இடம் பிடிப்பதற்கு நடிகர் விஜயை எம்.ஜி.ஆர். போல் சித்தரித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் வரும் சமயத்தில் ஆயிரம் பேர் முதல்-அமைச்சர் வேட்பாளர் என கூறிக்கொண்டு வருவார்கள். ஆனால் 2021-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி தான் தமிழகத்தில் அமையும். அதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் கலந்து பேசி முடிவு செய்து அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஓட்டப்பிடாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘படப்பிடிப்பு முடித்த திரைப்படங்களுக்கு எடிட்டிங் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுமதி கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதேபோல் முடிக்கப்பட்ட படங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். நாளை (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பதற்கான ஆலோசனைகள் நடத்தப்படுகிறது. சமூக இடைவெளி இன்னும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.

Next Story