ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கொரோனாவுக்கு பலி


ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 6 Sept 2020 3:00 AM IST (Updated: 6 Sept 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் மு.வேலுச்சாமி கொரோனாவுக்கு பலியானார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் நோயின் தாக்கம் தினசரி அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக சராசரியாக ஒரு நாளைக்கு 100 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி தொற்று கண்டறியப்படுகிறது. ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்து அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட ஊராட்சியின் துணைத்தலைவராக இருக்கும் மு.வேலுச்சாமி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்து உள்ளார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் மு.வேலுச்சாமி, அம்மாபேட்டை ஒன்றியம் ஆனந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை முத்துக்கவுண்டன். ஒரு சகோதரர் மற்றும் 3 சகோதரிகள் உள்ளனர்.

வேலுச்சாமி சிறு வயதிலேயே அரசியல் ஆர்வத்துடன் இருந்தார். டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் அமைத்ததில் இருந்து சங்கத்தில் தீவிர ஈடுபாட்டுடன் திகழ்ந்தார். 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டபோது, கட்சியின் மாவட்ட இளைஞர் சங்க செயலாளராக பதவி வகித்தார்.

தொடர்ந்து மாநில இளைஞர் சங்கத்தின் துணை செயலாளராக உயர்ந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடனும் நட்பில் இருந்த இவர், ஏற்கனவே ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலராக பதவி வகித்து உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேலுச்சாமி, ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலராக வெற்றி பெற்றார். பின்னர் ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார். ஈரோடு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் என்ற பெருமைக்கு உரியவராக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரண செய்தி கேட்டு மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு சென்றனர். மரணம் அடைந்த மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.வேலுச்சாமிக்கு வயது 48.

அவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், சுரேந்தர், வித்யாதரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சுரேந்தர் கல்லூரியிலும், வித்யாதரன் 7-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். மு.வேலுச்சாமி கொரோனாவுக்கு மரணம் அடைந்து இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பா.ம.க. மாநில துணை தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம், மாநில துணை பொது செயலாளர்கள் பரமேஸ்வரன், எஸ்.சி.ஆர்.கோபால், ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பா.ம.க. தொழிற்சங்க கவுரவ தலைவர் பொ.வை.ஆறுமுகம், டாஸ்மாக் மாவட்ட தலைவர் கருணாகரன், செயலாளர் சுதாகர், மாநில துணை பொது செயலாளர் கே.சேகர், பவானி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கார்ஜோன் சதீஷ், அம்மாபேட்டை ஒன்றிய குழு உறுப்பினர் வனிதா ஜெகதீசன் மற்றும் பா.ம.க. ஈரோடு மாநகர் மாவட்ட, ஈரோடு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மு.வேலுச்சாமியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


Next Story