பெங்களூருவில் விற்பனை செய்ய வீட்டில் பதுக்கிய ரூ.44 லட்சம் ஹசிஷ் ஆயில், கஞ்சா பறிமுதல் கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது


பெங்களூருவில் விற்பனை செய்ய வீட்டில் பதுக்கிய ரூ.44 லட்சம் ஹசிஷ் ஆயில், கஞ்சா பறிமுதல் கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 6 Sept 2020 3:56 AM IST (Updated: 6 Sept 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விற்பனை செய்ய வீட்டில் பதுக்கிய ரூ.44 லட்சம் ஹசீஷ் ஆயில், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் சங்கிலி பறிப்பு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அந்த கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், போதைப்பொருட்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்கவும், போதைப்பொருள் விற்பனையை அடியோடு ஒழிக்கவும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். இந்த சோதனையின் அந்த வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த வீட்டில் வசித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 26), விதூஸ் என்ற விஜயகுமார் (31), சச்சின் என்ற ஜான் (27) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் விதூஸ், இங்கிலாந்து நாட்டில் எம்.எஸ்.சி. மேற்படிப்பு படித்துவிட்டு கேரளாவுக்கு திரும்பி இருந்தார்.

3 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போதைப்பொருட்கள் விற்பனையில் 3 பேரும் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலின் தலைவனுடன் 3 பேருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ஹசிஷ் ஆயிலை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். அவற்றை பெங்களூருவுக்கு கடத்தி வந்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று 3 பேரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

ஹசிஷ் ஆயிலை சிறிய பாட்டீல்களிலும், கஞ்சாவை சிறிய பொட்டலங்களிலும் அடைத்து வைத்து விற்று இருக்கிறார்கள். கைதான 3 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 கிலோ 161 கிராம் ஹசிஷ் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.44 லட்சம் ஆகும். கைதான சுப்பிரமணி, விதூஸ், சச்சின் மீது கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உடன் இருந்தார்.

Next Story