செம்பனார்கோவில் அருகே, மின் ஊழியர் அடித்துக்கொலை - உறவினர் கைது
செம்பனார்கோவில் அருகே மின் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு,
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள நாச்சிகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகண்ணு(வயது 57). இவர், ஆக்கூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அவருடைய அண்ணன் மகன் சண்முகம்(37 ) என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் இடையே வழக்கம்போல் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சண்முகம் அருகில் கிடந்த மூங்கில் கம்பால் ராஜகண்ணுவின் தலையின் பின் பகுதியில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று ராஜகண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு ராஜகண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராஜகண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். இறந்த ராஜகண்ணுக்கு வேம்பு என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story