தனிமைப்படுத்தல் வார்டின் 4-வது மாடியில் இருந்து விழுந்து பலியான பெண்ணுக்கு கொரோனா இல்லை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்


தனிமைப்படுத்தல் வார்டின் 4-வது மாடியில் இருந்து விழுந்து பலியான பெண்ணுக்கு கொரோனா இல்லை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 6 Sept 2020 5:27 AM IST (Updated: 6 Sept 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தல் வார்டின் 4-வது மாடியில் இருந்து விழுந்து பலியான பெண்ணுக்கு மீண்டும் நடத்திய பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்ததால் அவரது உடலை வாங்க மறுத்து டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

மதுரவாயலை சேர்ந்தவர் செல்வி (வயது 48). இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரவாயலில் தனியார் கல்லூரி விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து செல்வி பரிதாபமாக இறந்தார்.

மதுரவாயல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என மருத்துவ முடிவுகள் வந்தது.

இதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் செல்வியின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், டாக்டர்களுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து செல்வியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு மீண்டும் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களின் அலட்சியத்தால்தான் செல்வி, கொரோனா இல்லாமலேயே கொரோனா இருப்பதாக கூறி அழைத்துச்சென்று தற்போது கொரோனா இல்லை என பிணமாக கொண்டு வந்து போட்டு விட்டதாக குற்றம் சாட்டினர்.

பின்னர் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று ஆம்புலன்சில் இருந்து செல்வியின் உடலை இறக்கி இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story