பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூர்த்தி, அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் அரவிந்தன், கிளை மேலாளர் இளங்கோவன், துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ்கள் இயக்கும் போது பயணிகளுக்கிடையே சமூக இடைவெளி கடைபிடித்து இயக்க வேண்டும். பஸ்களில் 60 சதவிகிதம் இருக்கைகளில் மட்டும் பயணிகளை ஏற்ற வேண்டும். ஒவ்வொரு பயணத்தின் போதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் பஸ்களில் பயணிகள் முன்பக்கம் ஏறும் வசதியும், பின்பக்கம் இறங்கும் வசதியை நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் செய்ய வேண்டும். தமிழக அரசின் நெறிமுறைகளை பஸ் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மேலும் பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆம்னி பஸ்களில் பயணிகளை வரிசையாக நிற்க வைத்து ஏற்ற வேண்டும். கூட்ட நெரிசலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பஸ்களில் குளிர் சாதன வசதி இயக்க கூடாது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Related Tags :
Next Story