சேலத்தில், கல்லால் தாக்கப்பட்ட டீக்கடைக்காரர் சாவு - ஆட்டோ டிரைவர்கள் மீது கொலை வழக்கு
சேலத்தில் கல்லால் தாக்கப்பட்ட டீக்கடைக்காரர் இறந்தார். இதனால் கைதான ஆட்டோ டிரைவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியை சேர்ந்தவர் அகமது பாட்ஷா (வயது 48). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அகமது பாட்ஷா அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிலர் அகமது பாட்ஷாவை கல்லால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
காயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இதில், அகமது பாட்ஷாவை கல்லால் தாக்கியது ஆட்டோ டிரைவர்களான களரம்பட்டியை சேர்ந்த சதீஷ்(34) மற்றும் அவருடைய நண்பரான 34 வயதுடைய ஒருவரும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, சதீசின் தாயை அகமது பாட்ஷா தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் இது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக சதீஷ் தனது நண்பருடன் சேர்ந்து அகமது பாட்ஷாவை கல்லால் தாக்கியது தெரியவந்தது.
இதனிடையே சதீசின் நண்பருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அகமது பாட்ஷா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து கைதான ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story