பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சேலத்தில் நாற்று நடும் போராட்டம்


பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சேலத்தில் நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2020 4:15 AM IST (Updated: 6 Sept 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி நேற்று சேலத்தில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சி 24-வது வார்டில் பிள்ளையார் நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் பழுதடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நேற்று காலை மழைநீர் தேங்கி உள்ள பழுதடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 2 நாட்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story