இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்த சிங்கள போலீஸ்காரர் பிடிபட்டார் - விசாரணையில் பரபரப்பு தகவல்கள்


இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்த சிங்கள போலீஸ்காரர் பிடிபட்டார் - விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 6 Sept 2020 3:45 AM IST (Updated: 6 Sept 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்த சிங்கள போலீஸ்காரர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரைக்கு வாலிபர் ஒருவர் கள்ளத்தனமாக வந்து இறங்கி இருப்பதாக கடலோர போலீசாருக்கு மீனவர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பாலம் கடற்கரை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி கடலோர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து, விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் தெரிந்தது, அவர் சிங்களத்தை சேர்ந்தவர் என்று. அவருக்கு தமிழ் பேச தெரியவில்லை. இதனால் அவரிடம் விசாரணை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே மண்டபம் அகதிகள் முகாமில் சிங்கள மொழி தெரிந்த 2 வாலிபர்களை வரவழைத்த போலீசார் அவர்கள் மூலம் சிங்கள வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் குடும்பத்தோடு தான் வசித்து வந்ததாகவும், தனது பெயர் பிரதீப்குமார் பண்டாரா (வயது 30) என்றும் அவர் கூறினார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கொழும்பு துறைமுகம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு மேலாகவே அதே போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வந்தார்.

கொழும்பு பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் அவர் பணியாற்றிய போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் 20 கிலோவில் இருந்து 25 கிலோ வரையிலான ஹெராயின் போதைப்பொருள் ஒரு வாரத்துக்கு முன்பு காணாமல் போனது.

இதுகுறித்து, பிரதீப்குமார் பண்டாராவின் அண்ணன் அனுரகுமரே என்பவரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் தானும் கைது செய்யப்படலாம் என பயந்து, அங்கிருந்து தமிழகத்துக்கு தப்பி வந்துவிட பிரதீப்குமார் பண்டாரா முடிவு செய்துள்ளார்.

இதற்காக கொழும்புவில் இருந்து அங்குள்ள மன்னார் மாவட்டத்துக்கு வந்து, அங்கிருந்த ஏஜெண்டு ஒருவர் மூலமாக நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் பிளாஸ்டிக் படகில் ஏறியுள்ளார். அவரை 2 பேர் படகில் அழைத்து வந்து தனுஷ்கோடி கடற்கரையில் இறக்கி விட்டு சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பிரதீப்குமார் பண்டாராவிடம் உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

பொதுவாக இலங்கையிலிருந்து அகதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் அவ்வப்போது வந்து பிடிபடும் நிலையில் தற்போது இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கை போலீஸ்காரர் ஒருவர் வந்து, தனுஷ்கோடியில் இறங்கி பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story