நரிக்குடி அருகே பரிதாபம்: கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அ.முக்குளம் அருகே வந்தவாசி கிராமத்தைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். இவருடைய மகன் அழகு திவாகரன் (வயது 9).
அதே ஊரைச் சேர்ந்த விஜயபாலாஜி என்பவருடைய மகன் சந்தோஷ் குமார் (8). இவனும், அழகு திவாகரனும் நேற்று மதியம் விளையாடி விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றவர்கள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் பதற்றம் அடைந்தனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்களிடம் விசாரித்தபோது, அழகுதிவாகரனும், சந்தோஷ்குமாரும் கண்மாய் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்ததாக தெரிவித்தார்கள். எனவே அவர்களை கண்மாய் கரையில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் தண்ணீருக்குள் இறங்கி தேடிய போது, அழகு திவாகரன், சந்தோஷ் குமார் ஆகியோர் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 2 சிறுவர்களையும் மீட்டு அ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்த போது, 2 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதனை அறிந்ததும் 2 சிறுவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 2 சிறுவர்களின் உடல்களும் பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கண்மாயில் ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என தெரியவருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story