இன்னும் எத்தனை மாதங்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டியது இருக்கும்? - மதுரை மருத்துவ அதிகாரி விளக்கம்


இன்னும் எத்தனை மாதங்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டியது இருக்கும்? - மதுரை மருத்துவ அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 6 Sept 2020 10:45 AM IST (Updated: 6 Sept 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

இன்னும் எத்தனை மாதங்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டியது இருக்கும்? என்பது குறித்து மதுரை மருத்துவ அதிகாரி விளக்கம் அளித்தார்.

மதுரை,

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் பல மாதங்களுக்கு பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கையும் வேகமாக திரும்பி வருகிறது. இருப்பினும் மக்களுக்கு கொரோனா வந்து விடுமோ? என்ற அச்ச உணர்வு இருக்கத்தான் செய்கிறது. கொரோனாவில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதனால், தலைக்கவசம் போன்று உயிர்கவசமாக முகக்கவசமும் மாறி இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மதுரையில் கொரோனா இன்னும் முழுமையாக முடிந்துவிடவில்லை. இருப்பினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். இதனால், எல்லா கடைகளிலும் விற்பனை களை கட்டி இருக்கிறது. நெரிசல் காரணமாக சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் மதுரை மீண்டும் வாகன நெரிசல் மதுரையாக மாறிவிட்டது.

இந்த நெரிசல்தான் கொரோனா வைரசுக்கு மிகவும் பிடித்தமானது. வெளியில் செல்வோரில் ஒரு பகுதியினர் முகக்கவசம் அணிவது கிடையாது.

சிலர் அணிந்திருக்கின்றனர், அதுவும் சரியாக அணிவதில்லை. சிலர் முகக்கவசத்தை கழற்றி விட்டு பொது இடங்களில் தும்முகின்றனர். இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் இதுபோல் அலட்சியம் காட்டக்கூடாது. அலட்சியம் காட்டினால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

நாம் அணியும் முகக்கவசம் கிழிந்து இருக்கக்கூடாது. மூக்கு, வாய்ப்பகுதி சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் முகக்கவசம் என்றால் அதனை குப்பை தொட்டியில் போடவேண்டும். துணி முகக்கவசம் என்றால் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பின்னர் அதனை நன்றாக சோப்பு நீரில் அலச வேண்டும்.

ஒருவர் குறைந்தபட்சம் 4 முகக்கவசங்களை வைத்து கொண்டு சுழற்சி முறையில் அதனை பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் என்.95 மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க் ஆகியவற்றை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். நம்மையும் பிறரையும் காப்பதற்கு முகக்கவசம் அணிவதே சிறந்த வழி.

குறைந்தபட்சம் இன்னும் 5 மாதங்களுக்கு முகக்கவசம் அணிந்தபடி வெளியே சென்று வருவது நல்லது. பெரும்பாலும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story