திண்டுக்கல் வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
திண்டுக்கல் வழியாக செல்லும் 10 சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
திண்டுக்கல்,
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்துக்குள் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் நாளை முதல் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் திண்டுக்கல் வழியாக முக்கிய ஊர்களுக்கு இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் திருச்சி-நாகர்கோவில் ரெயில் (வண்டி எண் 02627) காலை 7.08 மணிக்கும், மதுரை-சென்னை ரெயில் (02636) காலை 7.58 மணிக்கும், மதுரை-சென்னை ரெயில் (02638) இரவு 10.15 மணிக்கும், கன்னியாகுமரி-சென்னை ரெயில் (02634) இரவு 11.13 மணிக்கும், தூத்துக்குடி- சென்னை ரெயில் (02694) இரவு 12.02 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு வருகிறது.
சென்னை-மதுரை ரெயில் (02635) இரவு 8.03 மணிக்கும், நாகர்கோவில்-திருச்சி ரெயில் (02628) இரவு 8.05 மணிக்கும், சென்னை-மதுரை ரெயில் (02637) அதிகாலை 4.08 மணிக்கும், சென்னை-கன்னியாகுமரி ரெயில் (02634) இரவு 11.56 மணிக்கும், சென்னை-தூத்துக்குடி ரெயில் (02693) அதிகாலை 2.13 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு வந்து செல்கிறது.
இந்த ரெயில்களில் செல்லும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அதேபோல் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திண்டுக்கல்லில், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதேபோல் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதற்காக ரெயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு, ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக் கின்றனர். இதனால் வெளியூர் செல்ல விரும்பும் மக்கள் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story