இ-பாஸ் குளறுபடி: நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - தொற்று பரவும் அபாயம்
இ-பாஸ் குளறுபடியால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
ஊட்டி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்த அவசிய, அவசர மற்றும் பணி நிமித்தமாக வருகிறவர்கள் கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. நேற்று ஊட்டி-குன்னூர் சாலையில் வெளிமாவட்ட பதிவு எண்களை கொண்ட வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, சுற்றுலா பயணிகள் உலா வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இயற்கை அழகை ரசித்தபடி சாலையில் நடந்து செல்வதோடு, மலைகளை மேகக்கூட்டம் மோதி செல்லும் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
ஊட்டி வேலிவியூ பகுதியில் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டத்துக்குள் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் சுற்றுலா சம்பந்தமாக இ-பாஸ் விண்ணப்பித்து வந்ததாகவும், ஒரு நாளுடன் சொந்த காரில் திரும்பி செல்வதாகவும் தெரிவித்தனர். மேலும் ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டலில் சுற்றுலா பயணிகள் அறை எடுத்து தங்கி வருகின்றனர். வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நீலகிரியில் இ-பாஸ் குளறுபடியால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதோடு தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் வருவதால் நீலகிரியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருபவர்களுக்கு ஒரு நாளில் திரும்பி செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது. அவ்வாறு பெற்று வரும் சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் திரும்பாமல் நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள இடங்களுக்கும், நகர் பகுதிகளில் சுற்றித்திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story