சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது - பயணிக்க 1½ மணி நேரத்துக்கு முன்பே வர அறிவுறுத்தல்


சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது - பயணிக்க 1½ மணி நேரத்துக்கு முன்பே வர அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 Sept 2020 11:45 AM IST (Updated: 6 Sept 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. பயணம் செய்வதற்கு 1½ மணி நேரத்துக்கு முன்பே பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை,

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவையில் இருந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணியளவில் கோவை ரெயில்நிலையம், மேட்டுப்பாளையம் ரெயில்நிலையங்களில் தொடங்கியது. இதற்காக டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்பதற்காக கட்டம் வரையப்பட்டு இருந்தது. பயணிகள் அந்த கட்டத்தில் நின்று ஒருவர் பின் ஒருவராக சென்று டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ரெயில் புறப்படுவதற்கு 1½ மணி நேரத்துக்கு முன்பே ரெயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும். அங்கு அவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதற்காக கோவை ரெயில்நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப் பட்ட தெர்மல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் வெப்பநிலை கேமராவில் பதிவாகிவிடும். பயணிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

5 மாதத்துக்கு பிறகு இயக்கப்பட உள்ளதால் கோவை ரெயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. ரெயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. கோவை-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு எழும்பூர் சென்றடையும். சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு சென்னை சென்றடையும். ராணுவ தேர்வில் கலந்து கொள்பவர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யப்படாத ரெயில் கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மேட்டுப்பாளையத்துக்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் உள்ள கணினி முன்பதிவு மையத்தில் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அங்கு வந்த பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து டிக்கெட் பெற்று சென்றனர்.ரெயில் பயணிகள் பலர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் கோவை ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Next Story