ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு: பெண்ணின் உடலை கொரோனா பாதுகாப்பு முறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு - கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு: பெண்ணின் உடலை கொரோனா பாதுகாப்பு முறையில் அடக்கம் செய்ய எதிர்ப்பு - கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Sept 2020 4:47 PM IST (Updated: 6 Sept 2020 4:47 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே இறந்த பெண்ணின் உடலை கொரோனா முறைப்படி அடக்கம் செய்ய வருவாய்த்துறையினர் கேட்டதால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் பி.கே.வட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி செவ்வந்தி (வயது 27,), வியாபாரியான அவர் வாழைப்பழம் விற்று வந்தார். உடல் நலம் பாதித்த செவ்வந்தி 3-ந்தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கணவர் சங்கருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவுகள் வெளிவரவில்லை.

இதற்கிடையே, செவ்வந்தி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடலை டாக்டர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரின் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ஏலகிரி கிராமம் பி.கே. வட்டத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை வட்டாரச் சுகாதார மருத்துவமனை சார்பில் டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகியோர் நேற்று காலை சங்கரின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, செவ்வந்தியின் உறவினர்களுடன் பேசி, அவரின் பிணத்தை திருப்பத்தூர் நகராட்சியிடம் ஒப்படைத்து, அவரை கொரோனா முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும், எனத் தெரிவித்தார்.

ஆனால் செவ்வந்தியின் உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை எனக் கூறி, உடலை கொடுத்து அனுப்பி விட்டனர்.

தற்போது நீங்கள் கொரோனா முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி, எங்களிடம் உடலை கேட்டால் எப்படி? அப்படியானால் செவ்வந்திக்கு கொரோனா தொற்று உள்ளதா? இரவு முதல் காலை வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து அவரின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு தொற்று பரவாது? நோய் பரப்பும் நோக்கத்தோடு உடலை எங்களிடம் கொடுத்தீர்களா? எனக் கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, சங்கருக்கும், செவ்வந்திக்கும் கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. முடிவுகள் வந்ததும், நீங்கள் உங்கள் ஊரில் செவ்வந்தியின் உடலை அடக்கம் செய்யலாம், எனத் தெரிவித்தார்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது நேற்று அதே ஊராட்சியில் உள்ள காக்கங்கரையான் வட்டத்தில் 50 வயது நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. செவ்வந்தியின் கணவரான சங்கர் பெயரும், தொற்று பாதித்தவரின் பெயரும் ஒரே பெயராக இருந்ததால் சற்று குழப்பம் நிலவியது தெரிய வந்தது.

செவ்வந்திக்கும், அவரின் கணவர் சங்கருக்கும் கொரோனா தொற்று இல்லை என தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, செவ்வந்தியின் உறவினர்களிடமும், கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சங்கருக்கும், செவ்வந்திக்கும் கொரோனா தொற்று இல்லை எனக்கூறி, அவரின் உடலை முறைப்படி அடக்கம் செய்து கொள்ளலாம், எனத் தெரிவித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story