ஆபாசமாக நடனமாடிய விவகாரம் நடிகை சம்யுக்தா ஹெக்டேவை தாக்கியதாக காங். பெண் பிரமுகர் மீது வழக்கு


ஆபாசமாக நடனமாடிய விவகாரம் நடிகை சம்யுக்தா ஹெக்டேவை தாக்கியதாக காங். பெண் பிரமுகர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Sept 2020 2:19 AM IST (Updated: 7 Sept 2020 2:19 AM IST)
t-max-icont-min-icon

அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக நடிகை சம்யுக்தா ஹெக்டே அளித்த புகாரின்பேரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

கன்னடம் மற்றும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் அமைந்திருக்கும் அகரா ஏரியில் உள்ள பூங்காவில் தனது தோழிகளுடன் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு ஆபாசமாக நடனமாடி நடன பயிற்சியில் ஈடுபட்டார். இதை பூங்காவுக்கு வந்திருந்த பலரும் கண்டித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடிகை சம்யுக்தா ஹெக்டேவையும், அவருடைய தோழிகளையும் கண்டித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக எச்சரித்தனர்.

ஆபாசமாக நடனம்

இந்த சந்தர்ப்பத்தில் அகரா ஏரி பாதுகாப்பு அமைப்பின் தலைவியும், காங்கிரஸ் பிரமுகருமான கவிதா ரெட்டி, போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு பொது இடத்தில் ஆபாசமாக நடனம் ஆடிய நடிகை சம்யுக்தா ஹெக்டே மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

அதேவேளையில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவும், போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் கவிதா ரெட்டி, தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறியிருந்தார். 2 புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் பின்னர் இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

வழக்கு

இந்த நிலையில் நடிகை சம்யுதா ஹெக்டே அளித்த புகாரின்பேரில் கவிதா ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கவிதா ரெட்டி, டுவிட்டர் மூலம் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இச்சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story