காரில் செல்ல அனுமதிக்காததால் வாக்குவாதம்: காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய போலீஸ் உதவி கமிஷனர்


காரில் செல்ல அனுமதிக்காததால் வாக்குவாதம்: காங்கிரஸ் பிரமுகரை தாக்கிய போலீஸ் உதவி கமிஷனர்
x
தினத்தந்தி 6 Sep 2020 10:12 PM GMT (Updated: 6 Sep 2020 10:12 PM GMT)

காரில் செல்ல அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் பிரமுகரை போலீஸ் உதவி கமிஷனர் தாக்கியதை கண்டித்து போலீஸ் நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டி இருந்தனர். இதனால் அந்த இடத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்ட முடியாமல் இருந்தது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை சம்பந்தப்பட்டவர்களே காலி செய்யும்படியும், தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த மாதம் நோட்டீஸ் ஒட்டினர்.

ஆனால் அதன் பிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் பிரமுகர்

அப்போது அதே பகுதியை சேர்ந்த சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வீரபாண்டியன் என்பவர் காரில் அந்த வழியாக வந்தார். கோயம்பேடு போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, இந்த வழியில் போக கூடாது என்று அனுமதிக்க மறுத்தனர்.

உடனே காரில் இருந்த வீரபாண்டியன், ஆக்கிரமிப்புகள் சரியான முறையில்தான் அகற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், அவருக்கும் வாக்குவாதம் முற்றியது. தான் நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வேன் என்று அவர் போலீசாருடன் ஆவேசமாக பேசினார்.

உதவி கமிஷனர் தாக்குதல்

அப்போது கூட்டத்தினரை விலக்கி விட்டு உள்ளே வந்த மதுரவாயல் உதவி கமிஷனர் ஜெயராமன், திடீரென வீரபாண்டியனின் சட்டையை பிடித்து இழுத்து கோயம்பேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்றதாகவும், அப்போது அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர், நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் பிரமுகரை தாக்கியதுடன், அவரை சட்டையை பிடித்து இழுத்து சென்ற உதவி கமிஷனரை கண்டித்து கோயம்பேடு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story