வெளிமாவட்டங்களுக்கு செல்ல குமரியில் இருந்து இன்று முதல் 19 அரசு விரைவு பஸ்கள் இயக்கம்


வெளிமாவட்டங்களுக்கு செல்ல குமரியில் இருந்து இன்று முதல் 19 அரசு விரைவு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 7 Sept 2020 4:55 AM IST (Updated: 7 Sept 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 19 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில்,

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. பின்னர் ஜூன் மாதம் மீண்டும் பஸ் போக்குவரத்து மண்டலத்திற்குள் தொடங்கியது. மேலும் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கிதால், பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு, கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதாவது, இ-பாஸ் முறை ரத்து, 1-ந் தேதி முதல் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடக்கம், 7-ந் தேதி (இன்று) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து என பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி குமரி மாவட்டத்தில் 1-ந் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இன்று(திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லைக்கு 20 பஸ்களும், திருச்செந்தூர் 8, தூத்துக்குடி 17, மதுரை 12, திருச்சி 3, திண்டுக்கல் 3, குமுளி 2, ராமேசுவரம் மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு பஸ் இயக்கப்படுகின்றன. மாவட்டங்கள் இடையேயும், மாவட்டத்துக்குள்ளும் மொத்தம் 358 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை, கோவை, வேளாங்கண்ணி போன்ற நீண்ட தூர பயணத்துக்கு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள பணிமனைகளில் இருந்து பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், சென்னைக்கு 11 பஸ்களும், கோவை 4, ஒசூர் 3, வேளாங்கண்ணி 1 என மொத்தம் 19 விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இன்று வடசேரி பஸ்நிலையம் வந்து பயணிகளை ஏற்றி அந்தந்த ஊர்களுக்கு செல்லும். முன்னதாக நேற்று மாலையுடன் அனைத்து விரைவு பஸ்களுக்கான ஆன்லைன் மற்றும் கவுண்டர் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

அரசு அறிவுறுத்தலின் படி சமூக இடைவெளியை கடைபிடிக்க 43 இருக்கை வசதி கொண்ட விரைவு பஸ்களில், 26 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதேபோல் ஏ.சி. இல்லாத படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ்சில் 35 இருக்கைக்கு 25 பயணிகளும், 15 படுக்கை வசதி கொண்ட இடத்தில், 10 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

முன்னதாக வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி கடைகள் மீண்டும் கனகமூலம் சந்தைக்குள் நேற்று மாற்றப்பட்டன. பின்னர் பஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story