திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல் மேம்பாலப்பணிகள் துரிதப்படுத்தப்படுமா?


திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல் மேம்பாலப்பணிகள் துரிதப்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 7 Sept 2020 6:12 AM IST (Updated: 7 Sept 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் கிடப்பில் உள்ள மேம்பாலப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

பின்னலாடை தொழில் மூலமாக உலக அளவில் புகழ்பெற்ற ஊர் திருப்பூர். வாழ்க்கையை இழந்தவர்களுக்கு வாழ்வளிக்கும் ஊராக இருந்து வருகிறது. திருப்பூருக்கு சென்றால் பிழைத்துக்கொள்ளலாம் என்று தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருப்பூர் வந்தனர். உழைப்பை செலுத்தினால் உன்னத நிலையை அடைய முடியும் என்பதே திருப்பூரின் நிலை. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில தொழிலாளர்களும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. இங்கு 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதுதவிர வெளிமாநில தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் இங்கு உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஊரடங்கு தளர்வு, தொழில் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கியது முதல் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி திரும்பி இருக்கிறார்கள். 100 சதவீதம் தொழிலாளர்களை கொண்டு தொழில் நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அறிவித்ததன் பயனாக பின்னலாடை நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்து கடந்த ஒரு வாரமாக மாவட்டத்துக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று(திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருப்பூரில் மீண்டும் தொழில் வேகமெடுக்கும் என்று தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, திருப்பூர் மாநகரில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் திருப்பூரில் அதிகரித்து விட்டனர். தொழிலாளர்கள் பெரும்பாலும் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். அதுபோல் தொழில் பகுதி என்பதால் பெரும்பாலானவர்கள் 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூரின் பிரதான சாலைகளில் எப்போதும் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குமரன் ரோடு, பி.என்.ரோடு, அவினாசி ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதிகளில் எப்போதும் வாகனப்போக்குவரத்து அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக திங்கட்கிழமை தொடங்கி வேலை நாட்களில் காலை, மாலை நேரங்களில் குமரன் ரோட்டில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடிகிறது. சனிக்கிழமையன்று வழக்கத்துக்கு மாறாக சாலைகளில் வாகன நெருக்கடி அதிகரித்து விடுகிறது. வாகன பெருக்கத்தால் வாகன நெருக்கடி மாநகரில் அதிகரித்து செல்கிறது. பின்னலாடை தொழிலை பொறுத்தவரை ஒரு ஆடையை தயாரிக்க பல்வேறு ஜாப்ஒர்க் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் ஆடை தயாரிப்புக்கு அருகில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வாகனங்களில் ஆடைகளை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் ஆடைகளை அனுப்பி வைக்க வேண்டும். இங்கு காலம் முக்கியமானதாக கருதுவதால் குறிப்பிட்ட நேரத்தில் ஆடைகளை ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்காக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் விரைந்து செல்லும் போக்கு அதிகம் காணப்படும். இதுதவிர அரசு அலுவலகங்கள் ,தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பயணப்பட்டு வருகிறார்கள்.

இவை அனைத்தும் மாநகரில் வாகன நெருக்கடியை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகரில் இருந்த பிரதான சாலைகள் இன்னமும் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், போதுமான இட வசதியின்மை போன்றவை சாலை விரிவாக்கத்துக்கு தடையாக இருக்கிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப மாநகருக்குள் சாலை வசதி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

மாநகருக்குள் சாலையை விரிவுபடுத்துவதுடன் மேம்பாலங்களை அமைத்தல், சுற்றுச்சாலைகளை அதிகப்படுத்துவதன் மூலமாகவே மாநகருக்குள் வாகன நெருக்கடியை எதிர்வரும் காலங்களில் தவிர்க்க முடியும். இதை கருத்தில் கொண்டே திருப்பூர் மாநகருக்குள் தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலங்கள் திட்டமிடப்பட்டது. ரெயில்வே மேம்பாலத்தை தவிர திருப்பூர் டி.எம்.எப். சுரங்கப்பாலம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

வஞ்சிப்பாளையம் ரோடு சிறுபூலுவப்பட்டி ரிங்ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பால பணி இதுவரை முடிவடையவில்லை. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் மங்கலம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் காலேஜ் ரோட்டுக்கு எளிதாக செல்ல முடியும். அதுபோல் குமரன் ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள சுரங்கப்பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணிகள் தொடராமல் உள்ளது. நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொங்கு மெயின் ரோட்டில் 2-வது ரெயில்வேகேட் பகுதியில் ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்படவில்லை. மணியக்காரம்பாளையம்-மண்ணரை இணைப்பு நொய்யல் பாலத்தின் இருபுறமும் அணுகுசாலை அமைத்தால் வாகன போக்குவரத்து தொடங்கி மாநகருக்குள் வாகன நெரிசல் தவிர்க்கப்படும்.

இதுபோன்ற மேம்பாலப்பணிகளை விரைந்து முடிப்பதன் மூலமாகவே பெருகி வரும் வாகன நெருக்கடியை மாநகருக்குள் தவிர்க்க முடியும்.

அதுபோல் கனரக வாகனங்களை மாநகருக்குள் காலை, மாலை நேரத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும். முடிந்தவரை சுற்றுச்சாலை வழியாக கனரக வாகனங்களை திருப்பி விட்டால் மாநகருக்குள் நெரிசல் குறையும். நொய்யல் ஆற்றின் கரையோரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் அந்த வழியாக சென்றாலும் நெரிசல் குறைந்தபாடில்லை.

திருப்பூர் மாநகருக்குள் பெருகி வரும் வாகன நெரிசலை தவிர்க்க கலெக்டர், மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல் ஆணையரக அதிகாரிகள் திட்டமிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

Next Story