திருச்சியில் தயார் நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று முதல் சென்னைக்கு இயக்கப்படுகிறது


திருச்சியில் தயார் நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று முதல் சென்னைக்கு இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 7 Sept 2020 11:38 AM IST (Updated: 7 Sept 2020 11:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

திருச்சி,

கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில் இருந்து பல தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந்தேதி அறிவித்தார். இதனடிப்படையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

7-ந்தேதி (இன்று) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதேபோல் தமிழகத்திற்குள் தெற்கு ரெயில்வே சார்பில் 13 ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி ரெயில்கள் மற்றும் பஸ்களை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த என்ஜின்களை சுத்தம் செய்து ஊழியர்கள் தயார் செய்தனர். தண்டவாள பராமரிப்பு பணிகளும் நடைபெற்றன.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் உள்ள பணிமனையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும் இருக்கைகள் உள்ளிட்ட பஸ்சின் அனைத்து பகுதிகளும் பழுது பார்க்கப்பட்டன. இன்று முதல் இந்த பஸ்கள் இயக்க தயார் நிலையில் உள்ளன.

அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்களில் பயணிகள் பயணம் செய்வதற்கு ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்வது நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் குறைந்த அளவிலான பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் பயணிகள் வரிசையில் நின்று முன் பதிவு செய்தனர்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணி வரை குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில் 13 அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து மற்ற ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் எப்போது இயக்கப்படும்?என்று கேட்டதற்கு அதுபற்றிய அறிவிப்பை தமிழக அரசு ஓரிரு நாட்களில் வெளியிடும்.அதன் பின்னரே நாங்கள் மற்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்குவது பற்றி முடிவு செய்வோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story