கரூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம் பயணிகளுக்கு முககவசம் கட்டாயம்


கரூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம் பயணிகளுக்கு முககவசம் கட்டாயம்
x
தினத்தந்தி 7 Sep 2020 6:16 AM GMT (Updated: 7 Sep 2020 6:16 AM GMT)

கரூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

கரூர்,

கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில் இருந்து பல தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந்தேதி அறிவித்தார். இதனடிப்படையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட எல்லைக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று (7-ந்தேதி) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் அரசு விரைவு போக்குவரத்து பஸ்களில் நேற்று கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும் இருக்கைகள் உள்ளிட்ட பஸ்சின் அனைத்து பகுதிகளும் பழுது பார்க்கப்பட்டன. இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இன்று காலை 5 மணி முதல் வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், ராமேசுவரம், கம்பம், திண்டுக்கல், நாகை, கும்பகோணம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் வழக்கம்போல் இயக்கும். மேலும், இரவு நேரங்களிலும் பஸ்கள் இயக்கப்படும். பணிக்கு வரும் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யப்படும். பின்னர் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தே பணிக்கு வர வேண்டும். கரூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட கரூர், கிளை 1, கிளை 2, மற்றும் அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட மொத்தம் 263 பஸ்கள் உள்ளன. அதில் 60 சதவிகித பஸ்களான 160 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதில் டவுன் பஸ்கள் 74, தொலை தூர பஸ்கள் 86 இயக்கபட உள்ளன. பஸ் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறி முன்பக்க படிக்கட்டுகள் வழியாக இறங்க வேண்டும். மேலும் பஸ்சில் ஏறும்போது பின்பக்க படிக்கட்டுக்கு அருகே கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டு, அதில் கைகளை சுத்தம் செய்த பிறகே சீட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம். முககவசம் இல்லாமல் ஏறும் பயணிகள் ரூ.5 கொடுத்து கண்டக்டரிடம் முககவசம் வாங்கி கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது என போக்குவரத்து மண்டல பொது மேலாளர் குணசேகரன், கிளை மேலாளர் செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சியில் இருந்து திருப்பூர், கோவை, திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி, பழனி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வெளிமாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களை அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் தாமோதரன் நேரில் பார்வையிட்டார். அப்போது பணியாளர்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகிய அனைவருக்கும் முககவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினார். மேலும் பஸ்சில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும், கிருமிநாசினி வழங்கி சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அறிவுறுத்தினார்.

குளித்தலை அரசு பணிமனையில் இருந்து திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட முசிறி, மணப்பாறை, பெட்டவாய்த்தலை, திருச்சி சத்திரம் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மற்ற மாவட்ட பகுதிகளான மதுரை, பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story