அமைச்சர்களுக்கு அறிவுரை கூற கவர்னருக்கு தகுதி இல்லை நாராயணசாமி ஆவேசம்


அமைச்சர்களுக்கு அறிவுரை கூற கவர்னருக்கு தகுதி இல்லை நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 8 Sept 2020 2:57 AM IST (Updated: 8 Sept 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர்களுக்கு அறிவுரை கூற கவர்னருக்கு தகுதி இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முகாம் நடத்தி வருகிறோம். தற்போது ஜிப்மரில் நாள்தோறும் 1000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை 1,500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் 500-க்கும் மேல் சோதனைகள் மேற்கொள்ள உள்ளோம். கொசு தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் 1000 பரிசோதனைகள் செய்ய வசதி உள்ளது. அதனையும் பயன்படுத்த உள்ளோம்.

7 மாநிலங்கள் எதிர்த்த நிலையிலும் நீட் தேர்வினை நடத்தியே தீருவோம் என்று மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. அவர்களுக்கு மாணவர்களின் உயிரைப்பற்றி கவலை இல்லை. இதேபோல் சமையல் கியாஸ் மானியத்தையும் ரத்துசெய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாக அமையும்.

கவர்னர் கிரண்பெடி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்களுக்கான சம்பளம், மீனவர்கள் ஓய்வூதியம் தொடர்பாக கூறியுள்ளார். அவர் அமைச்சர் கந்தசாமிக்கு எழுதிய கடிதத்தில் கீழ்நிலை அதிகாரிகளை அழைத்து பேசக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு போடும் அதிகாரம் கிடையாது. எங்களுக்கு அறிவுரை கூற அவருக்கு தகுதியில்லை.

நேரத்தை வீணடிக்கிறார்

அதிகாரிகளை பொதுமக்கள் மத்தியில் வசைபாடி களங்கம் ஏற்படுத்தினார். நாங்கள் அதிகாரிகளை கண்ணியத்தோடு நடத்துகிறோம். சில நேரங்களில் திட்டங்களை நிறைவேற்ற கூட்டங்களில் கடினமாக பேசுகிறோம். ஆனால் கவர்னரைப்போல் வசைபாடுவதில்லை. நாங்கள் கொரோனாவை விரட்ட கவனம் செலுத்துகிறோம்.

ஆனால் மாளிகையில் இருந்துகொண்டு மக்களை சந்திக்காமல் அதிகாரிகளை கவர்னர் வசைபாடுகிறார். நாள்தோறும் அதிகாரிகளுடன் 2 மணிநேரம் கூட்டம் நடத்தி அவர்களது நேரத்தை வீணடிக்கிறார். மத்திய அரசுக்கும் தவறான தகவலை அனுப்புகிறார். நாங்கள் மத்திய அரசின் அறிவுரைகளை கடைபிடித்து இரவு, பகலாக பாடுபட்டு வருகிறோம். எனவே மாளிகையில் இருந்து கட்டளையிடுவதை கவர்னர் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதாவது இருந்தால் அவர் எனக்கு கடிதம் எழுத வேண்டும். ஆனால் அதை விடுத்து எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

உண்மைக்கு புறம்பானது

மத்திய அரசு ரூ.3 கோடி மட்டும் தந்துவிட்டு கடமை முடிந்துவிட்டது என்று உள்ளது. நாங்கள் மாநில அரசின் நிதியில் இருந்து செலவு செய்து வருகிறோம். கொரோனாவுக்கு புதுச்சேரியில் மட்டும்தான் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பகிரங்க கடிதம் என்று கூறி மக்களை குழப்புகிறார்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை தடுத்து நிறுத்துகிறார். கோப்பினை திருப்பி அனுப்பிவிட்டு கோப்பு என்னிடம் இல்லை என்கிறார். திருப்பி அனுப்பிவிட்டால் அது எப்படி உங்களிடம் இருக்கும்? இதேபோல்தான் மீனவர்களுக்கான கோப்பினையும் திருப்பி அனுப்பினார். இப்படி செய்துவிட்டு அவர் நாடகமாடக்கூடாது. திறந்த கடிதம் எழுதும் வேலையை விட்டுவிடவேண்டும். அவர் எழுதியது உண்மைக்கு புறம்பானது. கோப்புகளுக்கு தீர்வுகாண்பதுதான் கவர்னரின் வேலை.

அதை விடுத்து முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு உத்தரவு போடும் அதிகாரம் அவருக்கு இல்லை. இனிமேல் தனது போக்கினை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன். குறை சொல்வதையே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story