கபிஸ்தலம் அருகே பரபரப்பு: மின் வேலியில் சிக்கி இறந்த விவசாயி உடல் போலீசுக்கு தெரியாமல் புதைப்பு - 3 பேர் கைது
கபிஸ்தலம் அருகே மின் வேலியில் சிக்கி இறந்த விவசாயி உடல் போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ஓலைப்பாடி கீழத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 70). இவர், அந்த பகுதியில் உள்ள தனது கரும்பு வயலில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவதற்காக வயலை சுற்றி இரும்பு முள்வேலி அமைத்து அதில் மின்சாரம் பாய்ச்சி உள்ளார்.
இந்த நிலையில் வயலில் மின் வேலி இருப்பது அறியாமல் சம்பவத்தன்று அந்த வயல் வழியாக சென்ற ஓலைப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி கணேசன்(48) என்பவர் மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தியாகராஜன், அக்கம் பக்கத்து வயலின் உரிமையாளர்களான எருமைப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (45), ஓலைப்பாடி மேலத்தெருவை சேர்ந்த ராஜகோபால்(66) ஆகியோருடன் சேர்ந்து மின் வேலியில் சிக்கி இறந்த கணேசனின் உடலை கரும்பு வயலில் மறைத்து வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நள்ளிரவில் 3 பேரும் சேர்ந்து கரும்பு வயலுக்கு சென்று மறைத்து வைத்திருந்த விவசாயி கணேசனின் உடலை அருகே உள்ள மற்றொரு வயலில் புதைத்துள்ளனர்.
இந்த நிலையில் கணேசனை காணாமல் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இதுதொடர்பாக அவருடைய மகன் விக்னேஷ்(18), கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், மின் வேலியில் சிக்கி இறந்த கணேசனை தியாகராஜன், ராமச்சந்திரன், ராஜகோபால் ஆகிய 3 பேரும் சேர்ந்து போலீசுக்கு தெரியாமல் புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதைக்கப்பட்ட கணேசனின் உடல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் பாபநாசம் தாசில்தார் கண்ணன் மற்றும் போலீசார், தடயவியல் நிபுணர்கள், பாபநாசம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மின்வேலியில் சிக்கிய விவசாயியின் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story