திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியது


திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 8 Sept 2020 3:45 AM IST (Updated: 8 Sept 2020 7:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொண்டனர்.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக தமிழகத்தில் பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து கடந்த 5 மாதங்களாக முற்றிலுமாக முடங்கி போனது. இடையில் கடந்த மே மாதம் சில நாட்கள் மட்டும் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலத்திற்குள்ளும் பஸ், ரெயில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் அந்த அனுமதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றதால் தமிழக அரசால் பொதுப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இம்மாதம் 1-ந் தேதியிலிருந்து தமிழகத்தில் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி(நேற்று) முதல் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலம் முழுவதும் ரெயில் சேவைக்கு அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் நீண்ட தூர பஸ்கள் மற்றும் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

ரெயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினமே ரெயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் சீரமைக்கப்பட்டன. கிருமி நாசினி தெளித்து அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த ரெயிலின் என்ஜின் முன் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ரெயிலின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழங்களையும் வைத்தனர். இந்த சிறப்பு பூஜைக்கு பின்னர் ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயிலில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டனர். முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வந்ததும் அவர்களுக்கு முதலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்களுக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. அவர்கள் கை கழுவி சுத்தப்படுத்திக் கொண்ட பின்னர் பெட்டியில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 6.40 மணிக்கு இந்த ரெயில் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்றது. ஒரு பெட்டியில் அதிகபட்சமாக 36 பயணிகள் அமர வைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7 மணி அளவில் திருச்சிக்கு வந்தது. சென்னை செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அந்த ரெயிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்தனர். பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களை ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் முக கவசம் அணிந்த பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர்.

இதேபோல மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் பயணிகள் ஆர்வமுடன் ஏறி சென்றனர். காலை 11 மணியளவில் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் வந்தது. தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் நேற்று ரெயிலில் பயணித்த அனைத்து பயணிகளின் முகத்திலும் ஒருவித மகிழ்ச்சியை காணமுடிந்தது. பல பெண்கள் குழந்தைகளுடன் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்று களைகட்டியது என்று சொல்லும் அளவிற்கு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். இங்கிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களின் முதல் சேவை காலை 8 மணிக்கு தொடங்கியது. அந்த பஸ்சில் 26 பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் முன்பதிவு செய்த பயணச்சீட்டை காட்டி பஸ்களில் ஏற வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு கை கழுவும் திரவம் மூலம் கை கழுவிய பின்னரே டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளை உள்ளே செல்வதற்கு அனுமதித்தனர். இதேபோல அடுத்தடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் சென்னைக்கு மட்டும் இயக்கப்பட்டன.

அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சியிலிருந்து மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் மற்றும் கோவை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கும் திருச்சியில் இருந்து நேற்று அரசு பஸ்கள் சேவை தொடங்கியது. டவுன் பஸ்கள் வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தன.

Next Story