அரியலூரில் துணிகரம்: கோவில் உண்டியலில் பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரியலூரில் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூரில் புறவழிச்சாலை அருகே உள்ள கணபதி நகரில் ஐந்துமுக விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டு, பூட்டப்பட்டது. நேற்று காலை அர்ச்சகர் சண்முகம் கோவிலை திறக்க வந்தார்.
அப்போது கோவிலின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலையும் காணவில்லை. இது பற்றி அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலுக்கு பின்புறம் உண்டியல் கிடந்தது. மேலும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்நாள் இரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு, உண்டியலை அங்கேயே போட்டுவிட்டு சென்றது, போலீசாருக்கு தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று அர்ச்சகர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story