லால்குடி அருகே, கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி அடித்துக்கொலை - தொழிலாளி கைது
லால்குடி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டியை கட்டையால் அடித்துக்கொலை செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
லால்குடி,
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கோவண்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனகசபை. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவர்களுக்கு சிவகாமி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் வெளியூரில் உள்ளதாலும், வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாததாலும் அங்குள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் பழனியம்மாள் தங்கி காலத்தை கடத்தி வந்தார். அவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் கோவிலுக்கு வருபவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு கோவண்டாக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி அந்தோணிசாமி (57) மாரியம்மன் கோவில் அருகே சிமெண்டு கட்டையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோவிலில் இருந்த பழனியம்மாள், அந்தோணிசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து மூதாட்டியை பலமாக அடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வழக்கம்போல நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர், மூதாட்டி பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த கொலை தொடர்பாக பழனியம்மாள் மகள் சிவகாமி கொடுத்த புகாரின்பேரில், கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story