சென்னையை தொடர்ந்து புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவை மையம் - விரைவில் தொடக்கம்
சென்னையை தொடர்ந்து புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவை மையம் அமைகிறது. இதன் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பெரும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. சுகாதாரத்துறையினர் செயல்படுத்தி வரும் இந்த சேவையை தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. உடல் நலம் குன்றியவர்கள் சிகிச்சைக்காக, அவசர சிகிச்சைக்காக 108 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால், மறுமுனையில் தங்களது விவரத்தை கேட்டு உடனடியாக அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆம்புலன்ஸ்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்தோ அல்லது அதற்கான நிறுத்துமிடத்தில் இருந்தோ வந்து சேரும்.
இந்த தொலைபேசி சேவை மையமானது சென்னையில் மட்டும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் 108 தொலைபேசி எண்ணிற்கு ஏராளமான அழைப்புகள் வருவதால் கூடுதலாக புதுக்கோட்டையில் ஒரு தொலைபேசி சேவை மையம் அமைக்க சுகாதாரத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதுக்கோட்டை பழைய ராணியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இதற்கான கட்டிடம் தயராகி வருகிறது.
இந்த மையத்தில் பணியாற்ற வாலிபர்கள், இளம்பெண்கள் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டைக்கு விரைவில் வருகை தர உள்ளார். அப்போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
தமிழகத்தில் எங்கிருந்து 108 தொலைபேசி எண்ணிற்கு போன் செய்தாலும் புதுக்கோட்டை சேவை மையத்திற்கும் அழைப்பு வரும். இங்கு பணியில் உள்ளவர்கள், விவரத்தை பெற்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ் வேனை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பார்கள். சென்னையில் உள்ள 108 தொலைபேசி சேவை மையமும் இயங்கி வரும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 24 எண்ணிக்கையில் உள்ளன. தற்போது கொரோனா நோயாளிகளுக்காக அதிநவீன வசதி கொண்ட 5 ஆம்புலன்ஸ்கள் புதுக்கோட்டைக்கு வந்துள்ளன. இவை நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்தது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவை மையத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story