சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி
சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நேற்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு பஸ்கள் சேவை தொடங்கியது. இதன்படி சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
அதாவது சேலத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி சேலம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காலையில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப வெளி மாவட்டகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் குறைந்த அளவிலான பயணிகளே பஸ் நிலையத்திற்கு வந்து இருந்ததை காண முடிந்தது.
கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான பயணிகள் வெளியூர் செல்வதை தவிர்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர். சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 300 பஸ்களில் 60 சதவீத பஸ்கள் மட்டுமே நேற்று காலை முதல் இரவு வரை இயக்கப்பட்டன. ஏற்கனவே மாவட்டத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன.
கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம் பஸ் டிரைவர், கண்டக்டருக்கு சானிடைசர், கையுறை, முககவசம் ஆகியவை போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டு இருந்தது. சேலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, மாதேஸ்வரன் மலை மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் 52 பஸ்களும் இயக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சேலம் கிளை அலுவலகத்தில் இருந்து சென்னை, திருப்பதி, ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, செங்கோட்டை, குருவாயூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய ஊர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது முதல் கட்டமாக நேற்று 18 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சேலத்தில் இருந்து சென்னைக்கு வழக்கம்போல் விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஆனால் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பஸ்சில் பயணம் செய்தனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story