அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கம் - முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் அனுமதி
அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக நேற்று முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்பாடி,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. சரக்கு ரெயில்கள் மட்டும் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்திற்குள் செல்லும் சிறப்பு ரெயில்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல் கட்டமாக குறைந்த அளவிலான ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.50 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அதிலிருந்து சில பயணிகள் இறங்கினர். காட்பாடியில் இருந்து சில பயணிகள் பயணம் செய்தனர்.
ரெயில் நிலையத்திற்குள் நுழையும் முன்பு பயணிகளின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் கையில் சானிடைசர் கொடுத்து கைகளை தூய்மைப்படுத்த சொல்கின்றனர். அதன்பின்னர் சமூக இடைவெளியுடன் ரெயில் பெட்டியில் ஏறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளையும் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் கைகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அதனை கொண்டு பயணிகள் தங்களுடைய கைகளை தூய்மைப்படுத்தி கொண்டனர்.
கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 11 மணிக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 4.20 மணிக்கும் காட்பாடி ரெயில்நிலையத்துக்கு வந்தன.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணிக்கும், சென்னையில் இருந்து செல்லும் மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.50 மணிக்கும் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் காட்பாடி வழியாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே தற்போது ரெயிலில் பயணம்செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ரெயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதிக அளவு உடல்வெப்பநிலை இருக்கும் பயணிகளும் ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story