வாணியம்பாடி அருகே, கல்குவாரி குட்டையில் மூழ்கி மாற்றுத்திறனாளி பலி - 20 மணி நேரம் போராடி உடல் மீட்பு
வாணியம்பாடி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மாற்றுத்திறனாளி வாலிபர் பலியானார். அவரின் உடலை 20 மணிநேரம் போராடி வீரர்கள் மீட்டனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி பாரத்நகரை சேர்ந்தவர் ராஜா. இவரின் மகன் தமிழ்செல்வன் (வயது 25), மாற்றுத்திறனாளி. ஒரு கால் இழந்ததால் செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் உயிரிழந்த தனது பாட்டிக்கு நேற்று முன்தினம் இறுதி காரியம் செய்து விட்டு, அவரும், தந்தையும் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் பாரத்நகர் அருகே ஊசிதோப்பு பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர்.
அங்கு 20 அடிக்கும்மேல் ஆழம் உள்ள பள்ளத்தில் குளிப்பதற்காக அவரும், தந்தையும் இறங்கினர். அப்போது தமிழ்செல்வன் செயற்கை காலை கழற்றி விட்டு குட்டையில் குளிக்கச் சென்றார். ஆழமான பகுதியில் சிக்கிய தமிழ்செல்வன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளார். பதற்றம் அடைந்த தந்தை ராஜா, அவரை காப்பாற்ற முயன்றார். எனினும் அவரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. சிறிது நேரத்தில் தமிழ்செல்வன் குட்டை தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதுகுறித்து ராஜா வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து கல்குவாரி குட்டையில் இறங்கி நேற்று முன்தினம் மாலை 6.30 மணி வரை தேடினர். அவரை காணவில்லை. பின்னர் அப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை நிறுத்தி விட்டனர். இதையடுத்து நேற்று காலை வந்து மீண்டும் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
மேலும் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் ஆகியோர் தலைமையில் அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவைச் சேர்ந்த 8 வீரர்கள் மற்றும் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள், போலீசார் ஆகியோர் சுமார் 20 மணி நேரம் போராடி நேற்று மாலை 5.30 மணியளவில் கல்குவாரி குட்டையில் ஆழமான பகுதியில் சிக்கி பலியான தமிழ்செல்வனை பிணமாக மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story