சொத்து தகராறில் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை - அண்ணன் கைது
சொத்து தகராறில் கழுத்தை இறுக்கி வாலிபரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணணை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டையை அடுத்த மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 27). இவரது தம்பி அசோக் (25). இவர்கள் 2 பேரும் அம்மூரில் கோணிப்பை கடை நடத்தி வருகின்றனர். அருணுக்கு திருமணமாகிவிட்டது. அசோக்கிற்கு திருமணமாகவில்லை. கோணிப்பை கடையில் வரும் வருமானத்தை எடுத்து, அசோக் பொறுப்பில்லாமல் செலவு செய்து வந்தார். மேலும் அசோக்கிற்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
இவர்கள் 2 பேருக்கும் மேல்வேலம் பகுதியில் 4¾ ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது. இதனை பிரித்து தர வேண்டும், தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அசோக் தனது தாயார் அஞ்சலையிடம் மது அருந்திவிட்டு போதையில் தொந்தரவு செய்து வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அசோக்கை, அருண் நிலத்தில் தூங்குவதற்காக அழைத்தார். அங்கு சென்ற அசோக் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, கட்டிலில் படுத்து தூங்கினார். அருண் சிறிதுதூரத்தில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார்.
நேற்று அதிகாலை அருண் எழுந்து வந்து பார்த்தபோது, கட்டிலில் கால்கள் கட்டப்பட்டு, கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் அசோக் மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்தார். இதனால் பதற்றம் அடைந்த அருண், அய்யோ தம்பி தம்பி என கூச்சலிட்டு அழுதார். அங்கு வந்த பக்கத்து நிலத்துக்காரரான நேதாஜி உதவியுடன் மோட்டார் சைக்கிளில் அமர வைத்து வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அழைத்து வந்தார். அங்கு அசோக்கை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து தகராறு காரணமாக தம்பியை கொலை செய்துவிட்டு, அருண் நாடகமாடியது அம்பலமானது. அதைத்தொடர்ந்து போலீசார் அருணை கைது செய்தனர்.
சொத்து பிரச்சினைக்காக தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story