செஞ்சி அருகே, 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


செஞ்சி அருகே, 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
x
தினத்தந்தி 8 Sept 2020 5:00 AM IST (Updated: 8 Sept 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே 4 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள கீழ்வாலை கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரும், அதே பகுதியை சேர்ந்த புஷ்பா(வயது 27) என்பவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மணிகண்டன்(4) என்ற மகன் இருந்தான். கன்னியப்பன் குடும்பத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு கியாஸ் நிறுவனத்தில் அவர், டெலிவரி மேனாக வேலை செய்து வந்தார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கன்னியப்பன், தனது குடும்பத்துடன் சொந்த ஊரான கீழ்வாலை கிராமத்திற்கு வந்தார். அங்கு தன்னிடம் இருந்த பணத்தை வைத்து வீடு கட்டி வருகிறார். இதற்கிடையில் கன்னியப்பன், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். தினமும் மாலை குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை புஷ்பா கண்டித்ததால் கணவர்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் மது குடித்து விட்டு கன்னியப்பன் வீட்டிற்கு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரத்தில் கன்னியப்பன், மதுபோதையில் தூங்கி விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த புஷ்பா, தனது மகனுடன் இரவு 9.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர், கீழ்வாலை கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் புஷ்பா, தனது மகனுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் போதை தெளிந்ததும் நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் கன்னியப்பன் எழுந்தார். அப்போது வீட்டில் தனது மனைவியும், மகனும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த கிணற்றின் அருகில் புஷ்பாவின் செருப்பு மற்றும் செல்போன் இருந்தது. எனவே அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இது குறித்து அனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசாரும், வேட்டவலம் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து கிணற்றில் குதித்து, இருவரையும் தேடினர். அப்போது புஷ்பா மற்றும் மணிகண்டன் பிணமாக மீட்கப்பட்டனர். இருவரது உடலை பார்த்து கன்னியப்பன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீழ்வாலை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story