பிரதமர் நிதிஉதவி திட்டத்தில் மோசடி எதிரொலி: உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறதா? ஆய்வு செய்யும்படி, பா.ஜனதாவினர் கோரிக்கை
பிரதமர் நிதிஉதவி திட்டத்தில் மோசடி நடைபெற்றுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்யும்படி, பா.ஜனதாவினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி தலைவர் விஜயராமன், பா.ஜனதா மாவட்ட தலைவர் தனபாலன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் நாடு முழுவதும் 9½ கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஓராண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் தமிழகத்தில் சுமார் 40 லட்சம் விவசாயிகள் உதவித்தொகை பெற்றுள்ளனர். நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. ஆனால், சிலர் குறுக்கு வழியில் மோசடி செய்து உதவித்தொகையை பயன்படுத்துவது குற்றமாகும். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கோவை, வேலூர், கரூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு தலா 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை சேர்க்கப்பட்டு உள்ளனர்.
எனவே, தமிழ்நாடு முழுவதும் பிரதமர் நிதிஉதவி திட்டத்தின் பயனாளிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தி, உதவித்தொகை விவசாயிகளுக்கு கிடைக்கிறதா? அல்லது வேறுநபர்களுக்கு கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பயனாளிகளை ஆய்வு செய்து, உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும் மோசடி நடைபெற்று இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேகம்பூர் வத்தலக்குண்டு சாலை பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் மற்றும் நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், எனது தந்தை சண்முகம் நடிகர் ஆவார். கடந்த 1970-ம் ஆண்டு எங்கள் வீட்டின் முன்பு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை நிறுவினார். அதை நடிகர் கே.தங்கவேல் திறந்து வைத்தார். இந்தநிலையில் ஆக்கிரமிப்பு என்றுகூறி கலைவாணர் சிலை மற்றும் எங்களுடைய வீட்டை அகற்றும்படி மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்துகிறது. எனவே, கலைவாணர் சிலையை மீட்டு மாற்று இடத்தில் வைக்கவும், கலைஞர்களாகிய எங்களுக்கு அரசு வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. இன்றைய சூழலில் மடிக்கணினி இல்லாத ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story