பஸ்போக்குவரத்து தொடங்கியதால் வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பு ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி


பஸ்போக்குவரத்து தொடங்கியதால் வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பு ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Sept 2020 5:40 AM IST (Updated: 9 Sept 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

பஸ் போக்குவரத்து தொடங்கியதால் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரித்ததால் ஜவுளி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஈரோடு,

ஜவுளி மாநகரமாக விளங்கும் ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா கனி ஜவுளி சந்தை, காந்திஜி ரோடு சென்ட்ரல் தியேட்டர் ஜவுளி சந்தை, அசோகபுரம் ஜவுளி சந்தை, கங்காபுரம் டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை ஆகியவை பெரிய அளவிலான சந்தைகளாக உள்ளன.

இதில் பழமையான கனி வாரச்சந்தை வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புதன்கிழமை நிறைவடையும். தினசரி கடைகள் 320 மற்றும் சுமார் 1,000 வாராந்திர கடைகள் இங்கு கூடும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஜவுளிகள் எடுத்துச்செல்வது வழக்கம்.

இதுபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறு வியாபாரிகள் இங்கு வந்து ஜவுளிகள் எடுத்துச்செல்வார்கள். அதுமட்டுமின்றி இங்கு சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

வியாபாரிகள் கூட்டம்

பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் கனி மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளும் சந்தை நாட்களில் களை கட்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக ஈரோடு ஜவுளி சந்தை களை இழந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி, ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பிரமாண்ட வணிக வளாகம் கட்டப்படுவதால், கனி ஜவுளி சந்தையில் இயங்கி வந்த வாராந்திர சந்தை கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அந்த கடை உரிமையாளர்கள் பல்வேறு தனியார் சந்தை மையங்களில் வியாபாரம் செய்துவருகிறார்கள். தற்போது தினசரி சந்தையில் இயங்கி வந்த 320 கடைகள் இயங்க தனியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனால் வியாபாரிகள் வரத்து குறைந்தது. செப்டம்பர் மாத தொடக்கம் வரை எந்த விற்பனையும் இன்றி சந்தை வெறிச்சோடி கிடந்தது. கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கடந்த வாரம் வியாபாரிகள் வருகை தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் பொது மக்கள் வசதிக்காக பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ஈரோடு மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளனர். நேற்று கனி ஜவுளி சந்தையில் வியாபாரிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் சாலையோரமாக பலர் கடைகள் அமைத்து இருந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் சற்று வியாபாரம் நடந்ததால் ஜவுளி சந்தை கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

40 சதவீதம்

இதுகுறித்து கனி மார்க்கெட் தினசரி சந்தை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் நூர்சேட், கனி மார்க்கெட் வாராந்திர சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு ஜவளித்தொழிலை நம்பி இருக்கும் அனைவருக்கும் பெரிய அடியாக உள்ளது. கடந்த 6 மாதமாக எந்த வியாபாரமும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். தற்போது வியாபாரிகள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பஸ் போக்குவரத்து அனுமதித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம். வெளியூர் வியாபாரிகள் கடந்த வாரத்தை விட அதிகமாக வந்து இருக்கிறார்கள். பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து உள்ளது.

அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு நாங்கள் வியாபாரம் செய்கிறோம். வழக்கமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடக்கும் விற்பனையில் 40 சதவீதம் அளவுக்கு வியாபாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் கடந்து விட்டன. ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த பிரச்சினையும் இல்லாமல் வியாபாரம் நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story