கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் முதல்-அமைச்சர் மிகுந்த கவனம் செலுத்துகிறார் - குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி


கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் முதல்-அமைச்சர் மிகுந்த கவனம் செலுத்துகிறார் - குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 9 Sept 2020 7:37 AM IST (Updated: 9 Sept 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்று குமரகுரு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. திருக்கோவிலூருக்கு வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதியதாக தொடங்கப்பட்ட எந்த ஒரு மாவட்டமும் காணாத வளர்ச்சியும், அதிகப்படியான வளர்ச்சி திட்டங்களையும் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெற்று வருகிறது. இதற்கு மாவட்ட மக்கள் முதல்-அமைச்சருக்கு கட்சிவித்தியாசம் இன்றி நடுநிலை உணர்வுவோடு நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆவர். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற போதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நெடுஞ்சாலை திட்டப்பணிகள்துறை மூலம் ஆனைவாரி மேம்பாலம் ரூ.23 கோடியே 7 லட்சம் செலவிலும், கெடிலம் ஆற்றின் குறுக்கே அருங்குரிக்கையில் உயர் மட்ட பாலம் ரூ.10 கோடியே 5 லட்சம் செலவிலும் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் ரூ. 32 கோடியே 45 லட்சம் செலவில் 116 திட்ட பணிகளும் நடைபெற்றுள்ளன. உள்ளாட்சித்துறை மூலம் ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் ரூ.263 கோடி செலவிலும் பணிகள் நடைபெற்றுள்ளன.

பள்ளி கல்வித்துறை மூலம் 40 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் மற்றும் 13 பள்ளிகளுக்கு கழிவறை வசதி ஆகியன ரூ. 72 கோடியே 9 லட்சம் செலவிலும், உயர்கல்வித்துறை மூலம் சங்கராபுரம், சின்னசேலம், உளுந்துார்பேட்டையில் ரூ.21 கோடி செலவில் பள்ளி கட்டிடம், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகள், ஐ.டி.ஐ புதிய கட்டிடம் ஆகியன கட்டப்பட்டுள்ளன.

உளுந்துார்பேட்டையில் 262 ஏழை பயனாளிகள் பயன்பெறும் வகையில், அடுக்கு மாடி வீடு கட்டும் திட்டம் ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றது. இது தவிர கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட ரூ. 100 கோடியே 44 லட்சமும், கள்ளக்குறிச்சியில் மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்ட ரூ. 381 கோடியே 7 லட்சமும் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வவறு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அரசு அமையவும், மக்கள் இந்த நல்ல ஆட்சி தொடர தொடர்ந்து அரசுக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story