குன்னத்தில் மேற்கூரை பழுதடைந்ததால் பயனற்ற நிலையில் பயணிகள் நிழற்குடை சீரமைக்க கோரிக்கை


குன்னத்தில் மேற்கூரை பழுதடைந்ததால் பயனற்ற நிலையில் பயணிகள் நிழற்குடை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Sept 2020 11:22 AM IST (Updated: 9 Sept 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தில் மேற்கூரை பழுதடைந்ததால் பயனற்ற நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னம்,

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாலுகா அலுவலகம், வங்கிகள், பள்ளிகள், போலீஸ் நிலையம் உள்பட பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு, தினமும் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குன்னம் தாலுகா அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு வெளியூரில் இருந்து வந்து செல்வார்கள். குன்னத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட விருப்ப நிதியில் இருந்து குன்னம் பஸ் நிலையம் அருகில் உள்கட்டமைப்பு மற்றும் இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

பின்னர் அந்த நிழற்குடையின் மேற்கூரை பழுது அடைந்தது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அந்த நிழற்குடையின் கீழ் நிற்பதில்லை. இதனால் அந்த நிழற்குடை பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் வெயில் மற்றும் மழை காலங்களில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் அருகில் உள்ள கடைகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பழுதடைந்த மேற்கூரையை புதிதாக மாற்றி தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மழை காலங்களில் நிழற்குடையின் கீழ் பயணிகள் நிற்க முடியாமல் அருகில் உள்ள கடைக்கு செல்ல நேர்ந்தால், கடைக்காரர்கள் திட்டுவதால் மழையில் நனைந்தபடியே பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. எனவே பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன்கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story