பழனி முருகன் கோவிலில் கார்த்திகை பூஜைக்கு குவிந்த பக்தர்கள்
பழனி முருகன் கோவிலில் மாத கார்த்திகை பூஜைக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
பழனி,
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. இதில் அரசு பல விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது.
இதனால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மேலும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். இதில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாத கார்த்திகை மற்றும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால், பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் காலை முதலே அதிகளவில் காணப்பட்டது. அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாத கார்த்திகையையொட்டி தங்கரத புறப்பாடு, தங்கமயில் வாகனத்தில் சாமி உலா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக தங்கரத புறப்பாடு, தங்க மயில் வாகனத்தில் சாமி உலா ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story