கொரோனாவில் இருந்து மீண்டு வரும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு - டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவிப்பு


கொரோனாவில் இருந்து மீண்டு வரும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு - டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 2:30 PM IST (Updated: 9 Sept 2020 2:22 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.

தேனி, 

தேனி மாவட்டத்தில் சுமார் 190 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 176 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு, தனிமைப்படுத்தும் காலம் முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தேனி போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு, பணிக்கு திரும்பிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது டி.ஐ.ஜி. கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமுடன் போலீசார் பணியாற்ற வேண்டும். கபசுர குடிநீர், ஆர்செனிக் மாத்திரைகள் போன்றவற்றை போலீசார் எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பும் போலீசாருக்கு 2 வார காலத்துக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

போலீஸ் அதிகாரிகளும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பின்னர் 2 வார காலத்துக்கு இரவு ரோந்து பணிகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த கால கட்டத்தில் இரவில் நன்கு தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும். இரவுப் பணி இல்லை என்று வீட்டில் இருக்கும் போது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். போலீசாருக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அருண்கபிலன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story