தேனியிலும், பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடு: 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ.11 லட்சம் மீட்பு


தேனியிலும், பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடு: 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - ரூ.11 லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 3:00 PM IST (Updated: 9 Sept 2020 2:46 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்திலும் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டு, 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

தேனி,

பிரதமரின் நிதிஉதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை, எளிய விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதிஉதவி ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகள் என்ற பெயரில் போலியான ஆவணங்கள் மூலம் பலர் பயனாளிகளாக இணைக்கப்பட்டு இருப்பதும், அவர்களின் வங்கி கணக்குகளில் நிதிஉதவி செலுத்தப்பட்டு அரசு நிதியில் முறைகேடு நடந்துள்ள தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் திண்டுக்கல், சேலம், விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் இந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என விரிவான விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது.

அதன்படி தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிய வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட 17 ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதற்கட்ட விசாரணையில் சுமார் 700 பேர் இதுபோன்று முறைகேடாக சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ரூ.11 லட்சம் மீட்கப்பட்டு அரசின் கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதில் பலரின் வங்கி கணக்கில் பணம் இருப்பு இல்லை என்பதும், பணத்தை செலுத்தியதும் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே, மேலும் பலரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story