வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 9 Sept 2020 3:15 PM IST (Updated: 9 Sept 2020 4:06 PM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

பாலக்கோடு,

பாலக்கோடு ஒன்றியம் ஜோதிஅள்ளி கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அசோக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது பருவமழை பெய்து வருவதால் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்ட ஏரிகளில் மழைநீரை தேக்கி வைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிறைவேற்றி வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாவட்டத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 940 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நல்ல திட்டங்களை நிறைவேற்றி வரும் அ.தி.மு.க. அரசு வருகிற சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் ரங்கநாதன், நகர செயலாளர் சங்கர், மீனவரணி செயலாளர் முத்துராஜ், முன்னாள் நகர செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மணிவண்ணன், நிர்வாகிகள் பெருமாள், வடிவேல், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story