நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தடங்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அன்பழகன், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணி, நிர்வாகிகள் சிவன், கந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்பு கொடிகளை ஏந்தி ஏழை எளிய மாணவ-மாணவிகளின் மருத்துவ படிப்பு வாய்ப்பை பறிக்கும் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர் செல்லதுரை, நிர்வாகிகள் ரமேஷ், பிரகாஷ், சிட்டிபாபு உள்ளிட்டோர் கருப்பு கொடிகளுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பென்னாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வீரமணி, மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், நிர்வாகிகள் காளியப்பன், சிவக்குமார், முருகேசன், கமலேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதியமான்கோட்டையில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மாதுசண்முகம், சார்பு அணி நிர்வாகிகள் முத்தமிழன், நவீன்குமார், தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கருப்பு கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
பாலக்கோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் நகர செயலாளர் முரளி, மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பி.கே.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காரிமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், இளைஞரணி நிர்வாகிகள் அருள், வசந்த், சுரேஷ் உள்பட தி.மு.க.வினர் பங்கேற்றனர். இதேபோல் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஏரியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story