தம்மம்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
தம்மம்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தம்மம்பட்டி,
தம்மம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட குரும்பர் தெரு மற்றும் உடையார்பாளையத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் நோய்தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. உடையார்பாளையம் அறிஞர் அண்ணா சமுதாய கூடத்தில் கொரோனா பரிசோதனை முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
மேலும் முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றி தங்கியுள்ள அனைத்து பொதுமக்களையும் முகாமிற்கு வரவழைத்து உரிய பரிசோதனைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஆர்சினிக் மாத்திரைகள் மற்றும் முககவசங்களும் தொடர்ந்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இது குறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்களை தேடி டாக்டர்களே நேரில் சென்று பொதுமக்கள் தங்கி உள்ள பகுதிகளிலேயே மருத்துவ முகாம்கள் அமைத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஆர்சினிக் மாத்திரைகள் மற்றும் முககவசங்களும் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகின்றன.
நோய் தொற்று பாதிப்புக் குள்ளாகும் நபர்கள் தங்கியிருந்த பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் அரசின் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து இந்நோய் தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, அடிக்கடி சோப்பு கொண்டு தங்கள் கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்பதை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வலியுறுத்த வேண்டும். இதுகுறித்து ஒலிப்பெருக்கிகள் மூலமாகவும், தூய்மை காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.
தொடர்ந்து, மல்லியக்கரை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 30 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் போது ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் செல்வக்குமார், கெங்கவல்லி தாசில்தார் சிவகொழுந்து, தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்பட வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story