ஒகேனக்கல், ஏற்காடு பூங்காக்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ஒகேனக்கல், ஏற்காடு பூங்காக்களுக்கு சுற்றுலா செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேலம்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதற்கிடையே தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று (புதன்கிழமை) முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்துவிடப்படுகிறது. இதே போல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பூங்காக்கள் இன்று திறக்கப்பட உள்ளன. நீலகிரி, கொடைக்கானலில் உள்ள பூங்காக்களை காண சுற்றுலா பயணிகள் செல்லும் போது இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர் ஆகிய இடங்களில் பூங்காக்கள் உள்ளன. ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்கள், பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே கொடைக்கானல், நீலகிரியில் பூங்காக்கள் திறப்பது போன்று ஏற்காட்டில் உள்ள பூங்காக்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், தொங்கு பாலம், முதலை பண்ணை, மீன் அருங்காட்சியகம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் நடைமுறையும் இங்கு அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள் என சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
எனவே ஒகேனக்கல்லுக்கும் சுற்றுலா பயணிகளை இ-பாஸ் பெற்று அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மொத்தத்தில் ஒகேனக்கல், ஏற்காடு பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா? என பயணிகளும், சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
இதேபோல நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது கொல்லிமலையில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி அனுமதிக்க வேண்டும் என் கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story