மன்னார்குடியில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி,
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக கோரி சரபங்கா திட்டம் மற்றும் நீரேற்றும் கால்வாய் திட்டம் உள்பட புதிய நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகர தலைவர் ராஜ்குமார், நகர செயலாளர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாதர் சங்க நகர செயலாளர் மீனாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாசன நீர் பற்றாக்குறையால் முப்போகம் விளைந்த டெல்டா மாவட்டத்தில் தற்போது ஒரு போகம் சாகுபடி செய்ய நீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கும் நிலையில் உபரிநீர் வீணாவதாக கூறி சரபங்கா போன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். எனவே மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கைவிட வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் படுக்கை அணைகள் கட்டி, நீர்நிலைகளை தூர்வாரி கடலில் கலக்கும் நீரை சேமிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நெருக்கடியால் முடங்கி உள்ள விவசாயிகளுக்கு புதிய பயிர்க்கடன்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story