நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 1,500 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 1,500 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தி தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், முரசொலி, இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், நகர அமைப்பாளர் வெங்கடேசன், மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்தும், கையில் பதாகைகள் ஏந்தியும் கலந்து கொண்டனர்.
தஞ்சை ஒன்றிய மாணவரணி சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி வனதுர்கா நகரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அண்ணாகோபிநாத் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணியின், மாணவரணியினர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.
தஞ்சை மாநகரில் உள்ள 51 வார்டுகளிலும் தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிளை என தஞ்சை தெற்கு மாவட்டத்தில் 1,500 இடங்களில் இளைஞரணி நிர்வாகிகளின் வீடுகள் முன்பு கருப்பு சட்டை அணிந்தும், சமூக இடைவெளியுடனும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் 5 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டனர்.
திருவையாறு அருகே கல்யாணபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கங்காதரன், தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், ரமேஷ், சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை அடுத்து புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுரேஷ், இளைஞர் அணியை சேர்ந்த மணிகண்டன், ரவி, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story