மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு போனில் தொடர் மிரட்டல் ‘நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையில் தலையிடக்கூடாது’


மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு போனில் தொடர் மிரட்டல் ‘நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையில் தலையிடக்கூடாது’
x
தினத்தந்தி 9 Sep 2020 8:03 PM GMT (Updated: 9 Sep 2020 8:03 PM GMT)

நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு போனில் தொடர் மிரட்டல் அழைப்புகள் வந்தன.

மும்பை,

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசார் மீது சினிமாவில் வரும் மாபியாக்களை விட பயம் இருப்பதாகவும் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு ஆளும் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா ரணாவத் மும்பையில் வசிக்க உரிமை கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் கங்கனா ரணாவத் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்று அவரது முன்னாள் காதலன் ஆத்யாயன் சுமனின் குற்றச்சாட்டு குறித்து மும்பை போலீசார் விசாரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

போனில் மிரட்டல்

இந்தநிலையில் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. இமாசல பிரதேசம் மற்றும் வேறு இடங்களில் இருந்து நேற்று முன்தினம் 5-க்கும் மேற்பட்ட மிரட்டல் அழைப்புகள் வந்தன. 2-வது நாளாக நேற்று காலை 6 மணி அளவில் மேலும் 2 மிரட்டல் அழைப்புகள் அவருக்கு வந்தன.

போனில் பேசியவர் தனது பெயரை மிருதுயுஞ்செய் கார்க் என்று அறிமுகப்படுத்தி கொண்டதோடு, நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்றும் மந்திரியை மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் மிரட்டல் ஆசாமியை பிடிக்க மும்பை போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story