திருவண்ணாமலையில் ஆய்வுக்கூட்டம்; ஜவ்வாதுமலையை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் கோட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


திருவண்ணாமலையில் ஆய்வுக்கூட்டம்; ஜவ்வாதுமலையை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் கோட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sept 2020 6:10 AM IST (Updated: 10 Sept 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

‘ஜவ்வாதுமலையை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய்க்கோட்டம் ஏற்படுத்தப்படும்’ என திருவண்ணாமலையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

திருவண்ணாமலை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி ஆய்வு செய்வதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். முதல் நிகழ்ச்சியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்தபடி மாவட்டத்தில் ஏற்கனவே ரூ.52 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற 31 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் பொதுப்பணித்துறை, தோட்டக்கலைத் துறை பால்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.19 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 279 பயனாளிகளுக்கு ரூ.134 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். முன்னதாக அவர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 60 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல் உற்பத்தி அதிகளவில் உள்ளது. இங்குள்ள அரிசிக்கு தனி சிறப்பு உண்டு.

மேலும் கைத்தறி நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம். ஆரணி பட்டு உலக அளவில் தனி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஆரணி பட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மலைவாழ் மக்களுக்காக ஜெயலலிதாவின் அரசு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி உள்ளது.

ஜவ்வாதுமலையில் உண்டு உறைவிடப்பள்ளி ஏற்படுத்தி மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் சிறு தானியங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக மக்கள் அதிகளவில் சிறு தானியங்களை வாங்கி உணவுப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேன் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. ஜவ்வாதுமலையில் தனி வருவாய்க்கோட்டம் உருவாக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாமக்கட்டி செய்யும் தொழிலில் 130 குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது திருப்பதி வரை இந்த நாமக்கட்டி அனுப்பப்படுகிறது. நான் திருவண்ணாமலைக்கு வந்தபோது பெண்கள் நாமக்கட்டி தயாரிப்பது குறித்து செய்து காண்பித்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற கிரிவலப்பாதையை மேம்படுத்த நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது எனக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். “சிறந்த சாலையாக உருவாக்க வேண்டும். நடைபாதை, குடிநீர் வசதி, ஓய்வு அறை, கழிவறை வசதிகள், நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்” என்றார். அதன்படி ரூ.65 கோடியில் கிரிவலப்பாதை பல்வேறு வசதிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் தங்குவதற்காக ‘யாத்ரி நிவாஸ்’ பணி நிறைவு பெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறோம். தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. செண்பகத்தோப்பு அணையில் புதிதாக ஷட்டர் அமைக்க கலசபாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அதன்படி ஷட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரிகள் தூர்வரப்படுகின்றன. ஏரியில் உள்ள வண்டல் மண், விவசாய நிலங்களில் இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. வரலாற்றிலேயே அதிகளவில் தமிழகத்தில் நெல் உற்பத்தி இந்த ஆண்டு கிடைத்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கிய காரணத்தினாலும் போதிய மழையினாலும் தமிழகத்தில் கூடுதலாக 6 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும்.

மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து குறைகள் கேட்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதல்- அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 846 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 35 ஆயிரத்து 500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருவண்ணாமலை -ஆரணியில் புறவழிச் சாலை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story