திருவாரூரில், ரூ.1-க்கு இட்லி- தோசை விற்கும் மூதாட்டி - குறைந்த செலவில் பசியாறுவதாக மக்கள் மகிழ்ச்சி


திருவாரூரில், ரூ.1-க்கு இட்லி- தோசை விற்கும் மூதாட்டி - குறைந்த செலவில் பசியாறுவதாக மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Sept 2020 3:45 PM IST (Updated: 10 Sept 2020 3:32 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் மூதாட்டி ஒருவர் ரூ.1-க்கு இட்லி- தோசை விற்பனை செய்து வருகிறார். இதனால் குறைந்த செலவில் பசியாறுவதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே நாராயணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலா(வயது 80). இவரது கணவர்் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனியாக வசித்து வரும் கமலா, தனது முதுமையை பொருட்படுத்தாமல், தானே உழைத்து வாழ வேண்டும் என்ற லட்சியத்துடன் நாரணமங்கலம் பாண்டவையாறு கரையோரத்தில் கீற்று கொட்டகையில் இட்லி கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை காலை நேரத்தில் மட்டும் இயங்கி வருகிறது. எப்போதும் மக்கள் கூட்டம் இந்த கடையில் நிரம்பி வழிகிறது. இதற்கு காரணம் இவரது கடையில் இட்லி மற்றும் தோசையின் விலை தலா ரூ.1 மட்டுமே என்பது தான். இதற்கு ருசியாக 2 வகை சட்னி மற்றும் சாம்பாருடன், இட்லி பொடியும் அளித்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளான இவர் இந்த சேவையை செய்து வருகிறார்.

ஒரு ரூபாய்க்கு எப்படி உணவு அளிக்க முடிகிறது என கமலா பாட்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது மகள் மற்றும் மகன்களுக்கு திருமணம் நடந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்பதற்காக எனது தாய் வழியில் இந்த இட்லி கடையை நடத்தி வருகின்றேன். அந்த காலத்தில் எனது தாய் 50 பைசாவிற்கு இட்லி, தோசை விற்று வந்தார். அவருக்கு பின்னர் ரூ.1-க்கு இட்லி, தோசை வழங்க தொடங்கி கடந்த 50 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன்.

எனக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏழை, எளிய மக்கள் பசியாற வேண்டும் என்பது தான் ஆசை. மேலும் குறைந்த விலையில் உணவு அளித்து அனைவரின் பசியை போக்குவதில் மன திருப்பதி அடைகிறேன். காலை 6 மணி தொடங்கி 10 மணி வரை தான் கடை நடத்துவேன். இந்த விற்பனையில் எனக்கு ஒரு நாளில் ரூ.200 வரை லாபம் கிடைக்கிறது. இந்த தொகை எனக்கு போதுமானது. மனதுக்கு நிறைவான தொழிலாக இருப்பதால் இந்த வயதிலும் மகிழ்ச்சியுடன் அனவைருக்கும் உணவு வழங்கி வருகின்றேன்.

இதன் மூலம் குறைந்த விலையில் பசியாறும் விவசாய தொழிலாளர்கள் கூறியதாவது:-

தற்போது உள்ள நிலையில் ஓட்டலுக்கு சென்றால் காலை உணவு சாப்பிட குறைந்தது ரூ.50-க்கு மேல் செலவு செய்ய வேண்டும். அன்றாட கூலி வேலை செய்யும் நாங்கள் குறைந்த விலையில் பசியாற கமலா பாட்டி துணையாக இருந்து வருகிறார். இதனால் நாங்கள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு செல்கிறோம். வெளியூரில் இருந்து வருபவர்களும் காலை கடை வாசலில் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர் என்றார். வயதான காலத்தில் மற்றவர்களுக்கு பாரமாக இருக்காமல் உழைத்து சொந்த கால்களில் நிற்பது என்பது கடினமானது. இதில் வயதான காலத்தி்ல் உழைக்கும் கமலா பாட்டி குறைந்த விலையில் உணவு அளித்து மக்களின் பசியை போக்குவது பாராட்டுக்்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story