கும்பகோணத்தில் பரிதாபம்: காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சின்னப்பா. இவருடைய மகன் தெட்சிணாமூர்த்தி (வயது33). தொழிலாளி. திருமணமாகாதவர். நேற்று தெட்சிணாமூர்த்தி தனது வீட்டுக்கு அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு தெட்சிணாமூர்த்தியின் சட்டை, வேட்டி மட்டும் இருந்தது. தெட்சிணாமூர்த்தியை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தெட்சிணாமூர்த்தியை தேடினர். அப்போது அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
ஆற்றின் ஒரு பகுதியில் கிடந்த தெட்சிணாமூர்த்தியின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் அங்கு சென்று தெட்சிணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டதில் அவர் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story