தஞ்சை கடைக்கு காரில் வந்த பால் திருடர்கள் - பெட்டியுடன் தூக்கி சென்றதாக பரவும் வீடியோ
தஞ்சையில் உள்ள ஒரு கடைக்கு காரில் வந்த பால் திருடர்கள் பெட்டியுடன் தூக்கிச்சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே பால் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் முன்பு அதிகாலை வேளையில் கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய திருடர்கள் அந்த கடையின் முன்பு இருந்த பால் பாக்கெட் அடங்கிய பெட்டியை திருடிச்செல்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வழக்கமாக தஞ்சை மாநகரில் உள்ள கடைகள் மற்றும் பால் பூத் நிறுவனங்களுக்கு நள்ளிரவுக்குப்பின்னர் வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்து வருவது வழக்கம். அப்போது கடைகள் பூட்டப்பட்டு இருப்பதால் அவ்வாறு வரும் பால் பாக்கெட் அடங்கிய பெட்டியை அந்தந்த கடையின் முன்பு இறக்கி வைத்து விட்டு செல்வார்கள்.
அவ்வாறு இந்த கடையின் முன்பு இறக்கி வைத்த பால் பாக்கெட்டுகளை காரில் வந்து திருடிச்சென்றுள்ளனர். இந்த காட்சி அருகில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் எண்ணைக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story